ட்விட்டரில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்: எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கி தன் வசப்படுத்தியுள்ளார். ட்விட்டர் தன் வசமானதும் அதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரப்போவதாகவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்தார். அந்த வகையில், பல்வேறு மாற்றங்கள் ட்விட்டர் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ட்விட்டர் ஊழியர்கள் பாதிக்கும் மேல் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ கணக்கான ப்ளூ டிக்கை பயன்படுத்த மாதம் 8 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இது தவிர ட்விட்டரின் தொழில்நுட்பத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ட்விட்டரில் கருத்து சுதந்திரம் பற்றி அந்நிறுவனத்தை வாங்குவதற்கு முன்னரும், தற்போதும் பேசி வரும் எலான் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று கேள்வி எழுப்பி வாக்கெடுப்பு ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் வாக்களித்த பலரும், டொனால்ட் ட்ரம்ப்பை மீண்டும் சேர்க்கலாம் என வாக்களித்துள்ளனர். சுமார் 51.8 சதவீதம் பேர் இதுவரை அவரை ட்விட்டரில் சேர்க்கலாம் என ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதையடுத்து, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ட்விட்டரில் இணைக்கப்படுவார் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால், மெட்டா நிறுவனம் ட்ரம்ப் மீதான பேஸ்புக் தடையை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று அண்மையில் தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

உக்ரைன் போர்..ஆசிய நாடுகளை கண்டித்த பிரான்ஸ் அதிபர்.!

அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதற்கிடையில், அமெரிக்காவின் பல பகுதிகளில் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. அந்த சமயத்தில், சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி ட்ரம்ப்பின் ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.