சென்னை: “இளையராஜா எந்த இடத்தில் இருந்தாலும், தமிழர்களின் பெருமைமிக்க ஒரு அடையாளம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவருக்கு விருப்பமாக உள்ளது. அவரே மறுத்தாலும், அவர் தமிழ் பேரினத்தின் பெருமைமிகு இசை அடையாளம்தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
வட சென்னை – திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் மருத்துவப்பாசறை சார்பில் இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. இதன் பின்னர் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கால்பந்தாட்ட வீராங்கனை மாணவி பிரியா இறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதுபோன்ற நிகழ்வுகளின்போது அரசு எனன நினைக்கும் என்றால், இதுபோன்ற தவறுகள் வெளியே தெரியவந்தால், அரசின் நன்மதிப்பு கெட்டுவிடும் என்பதால் மறைப்பார்கள். அதுபோன்ற செய்திகளை ஊடகங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அந்த பொறுப்பும், கடமையும் அனைவருக்கும் உண்டு.
அதற்காக மொத்தமாகவே அரசு மருத்துவர்களை குறை சொல்லிவிட முடியாது. கரோனா காலத்தில், செவிலியர்கள் தேவதைகளைப் போலவும், மருத்துவர்கள் இறைவனைப் போலவும் பணியாற்றியதை அனைவரும் அறிவர். எனவே இது ஒரு விபத்து, ஆனால் இது தொடராமல் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மேலும் நீதிமன்றமே தரமற்ற மருந்துகள் இருப்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது, தரமற்ற மருந்துகள் இருப்பது உறுதியாகிறது. தரமான மருத்துவம் தனியார் மருத்துவமனைகளில்தான் கிடைக்கும் என்ற நிலையை உருவாக்காமல், அரசு மருத்துமனைகளை தரம் உயர்த்த வேண்டும்” என்றார்.
அப்போது வாரிசு திரைப்பட வெளியீடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ” அனைவரும் என்னைப் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக் கொள்கின்றனர். என் தம்பி விஜய் படம் உரிய நேரத்தில் வெளிவரும். அதனை தடுக்கமாட்டார்கள் என்று எனக்கு உறுதி தந்துள்ளனர். இல்லையென்றால் போராடுவேன். விழாக்காலங்களில் தெலுங்குத் திரைப்படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அது செயலாக்கம் பெறவில்லை, பெறாது. எனவே உறுதியாக விஜய் படம் வெளியாகும்” என்றார்.
அப்போது காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக முதல்வரையோ, அமைச்சர்களையோ அனுமதிக்காத விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “தமிழ்நாட்டை இதில் மட்டுமா புறக்கணிக்கின்றனர். எல்லாவற்றிலும்தான் புறக்கணிக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக இளையராஜா சென்று பங்கேற்றுள்ளார். அது பெருமைதானே நமக்கு.
இளையராஜா எந்த இடத்தில் இருந்தாலும், தமிழர்களின் பெருமைமிக்க ஒரு அடையாளம்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அவருக்கு விருப்பமாக உள்ளது. எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். அவருக்குப் பிடித்ததை அவர் செய்கிறார். அவரே மறுத்தாலும், அவர் தமிழ் பேரினத்தின் பெருமைமிகு இசை அடையாளம்தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அவரும் சரி, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் தமிழின் பெருமைக்குரிய அடையாளங்கள்தான்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலையில் மத்திய அரசின் கலாசாரத்துறை சார்பில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு, புண்ணிய பூமியான காசியில் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்று தோன்றிய பிரதமர் மோடியின் எண்ணத்தினைக் கண்டு வியந்து மகிழ்கிறேன் என்று பிரபல இசையமைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா பேசியிருந்தார்.