புதுடில்லி: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வுலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று (நவ.,20) 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 670 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் புதுச்சேரி- தமிழகம்- தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்.
தமிழகத்தில் கனமழைக்கு மட்டுமே வாய்ப்பு, மிக கனமழைக்கான வாய்ப்பு இல்லை. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை துவங்கும். அதேபோல் இன்று வட தமிழக மாவட்டம், புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழக மாவட்டம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றில் வேகம் அதிகமாக இருக்கும். தெற்கு ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி, இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று முதல் வரும் நவ.,22ம் தேதி வரை செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, எண்ணூர், நாகை, கடலூர் துறைமுகங்களில் இன்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement