"நர்மதா அணை திட்டத்தை தடுத்து நிறுத்தியவர்களுடன் பாரத் ஜோடோ யாத்திரை!" – ராகுலைச் சாடிய பிரதமர் மோடி

குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக வருகிற டிசம்பர் மாதம் 1, 5-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் ராஜ்கோட் மாவட்டத்தில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பிரதமர் மோடி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியை விமர்சித்தார். அந்த பேரணியில் பேசிய அவர், “நர்மதா ஆற்றின் மீது சர்தார் சரோவர் அணைக் கட்டும் திட்டம் குஜராத்தின் நீண்டநாள் கனவாக இருந்தது. ஆனால் ஒரு சில ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட சட்ட தடங்கல்களால், அந்தத் திட்டம் முப்பது ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆர்வலர்களில் மேதா பட்கரும் ஒருவர். ஆனால், அவருடன் இன்று காங்கிரஸ் தலைவர் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்வதைக் காண முடிகிறது” என்று விமர்சித்தார்.

பிரதமர் மோடி

தொடர்ந்து பட்கர் குஜராத் குறிந்து அவதூறு பரப்புவதாகக் குற்றம்சாட்டிய மோடி, “காங்கிரஸ் உங்களிடம் வாக்கு கேட்க வரும்போது… நர்மதா அணை திட்டத்தைத் தடுத்து நிறுத்தியவர்களுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் தோள்கொடுத்ததைப் பற்றியும் கேளுங்கள்” என்றார்.

2017-ம் ஆண்டு திறக்கப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த அணையின் நீர் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை இடம்பெயர்க்க வைக்கும் என்று கூறி பா.ஜ.க-வின் திட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்தவர் மேதா பட்கர். இதனால் அந்த திட்டம் முப்பது ஆண்டுகளாக முடக்கப்பட்டிருக்கிறது. பட்கர் முன்னதாக இந்த வாரத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை மகாராஷ்டிராவில் நடைபெற்றபோது அவருடன் இணைந்தார்.

பாரத் ஜோடோ

பட்கர் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்ததைத் தொடர்ந்து பா.ஜ.க தலைவர்கள் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், “குஜராத் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் தடுத்த பட்கர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைந்துள்ளார். இதன் மூலம் ராகுல் காந்தி எத்தகைய மனநிலை கொண்டவர் என்பது தெரிகிறது. குஜராத்திகள் இதை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதே போல, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “மேதா பட்கர் நர்மதா திட்டத்துக்கும், குஜராத்துக்கும், சௌராஷ்ட்ராவுக்கும் எதிரானவர். அதனால்தான் அவர் குஜராத்தில் வாழும் சௌராஷ்ட்ரா மக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதைத் தடுத்தார்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.