கொடைக்கானல்: கொடைக்கானலில் மழை குறைந்து பகலில் ‘சில் குளிரும்’, இரவில் ‘பல் நடுங்கும் குளிரும்’ என மாறி மாறி நிலவிய சீதோஷ்ண நிலையை வார விடுமுறைக்கு வந்த சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது குளிர் சீசனாகும். இதனை அனுபவிக்க தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவு இருக்கும்.
ஏனென்றால் தற்போது பெரும்பாலான வெளிநாடுகளில் உறை பனி சீசனாகும். இதனால் இந்தியா போன்ற வெப்ப மண்டலங்களை நோக்கி அவர்கள் வருவர்.
கொடைக்கானலில் கடந்த வார விடுமுறையின் ேபாது தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைவாக இருந்தது. வார விடுமுறையான நேற்று கொடைக்கானலில் மழை இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் வருகை ஓரளவிற்கு இருந்தது. பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, பில்லர் ராக், மோயர் பாயிண்ட், குணா குகை போன்ற இயற்கை கொஞ்சும் இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தவிர பிரையண்ட், செட்டியார், ரோஜா பூங்காக்களில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை கண்டு அகமகிழ்ந்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர். கொடைக்கானலில் மழை இல்லாததால் வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. கொடைக்கானலில் மழை குறைந்து பகலில் ‘சில் குளிரும்’, இரவில் ‘பல் நடுங்கும் குளிரும்’ என மாறி மாறி நிலவிய சீதோஷ்ண நிலையை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர்.