யாரடி நீ மோகினிக்கு யுவன் இசை இல்லையா?… ரகசியம் உடைத்த இயக்குநர்

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மித்ரன் ஆர்.ஜவஹர். இவர் யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி படத்தை இயக்கியதன் மூலம் மித்ரன் கவனம் பெற்றார். அந்தப் படத்தை முதலில் தெலுங்கில் செல்வராகவன் இயக்கினார். வெங்கடேஷ், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம் தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றது. 

அந்தப் படத்தில் தனுஷின் நடிப்பு, மித்ரனின் இயக்கம் அத்தனையும் ஸ்பெஷலாக இருந்தது. குறிப்பாக யுவன் ஷங்கர் ராஜாவின் கரியர் பெஸ்ட் படங்களில் யாரடி நீ மோகினி படத்துக்கு இருக்கிறது. அதில் இடம்பெற்ற பாடல்களும், பின்னணி இசையும் இன்றளவும் பலரது ஃபேவரைட்.

இந்நிலையில் சமீபத்தில் மித்ரன் கொடுத்திருக்கும் பேட்டியில் யாரடி நீ மோகினி குறித்து பல விஷயங்களை பேசியிருக்கிறார். மேலும் அதில் ஒரு ரகசியத்தையும் உடைத்திருக்கிறார். அந்தப் பேட்டியில், “யாரடி நீ மோகினி படத்தை தெலுங்கு திரைப்படத்திலிருந்து அப்படியே தமிழில் ரீமேக் செய்யவில்லை. கடைசி 15 நிமிடங்கள் வேறு திரைக்கதையை எழுதிக் கொடுத்தார் செல்வராகவன். அந்த சமயத்தில் யுவன் சங்கர் ராஜா பிசியாக இருந்ததால் பின்னணி இசைக்கும் பாலக்காட்டு பக்கத்திலே பாடல் ரீமிக்ஸிற்கு மட்டும் இமான் இசையமைத்து கொடுத்தார்” என்றார்.

யாரடி நீ மோகினி படம் முழுக்க முழுக்க யுவனின் இசையில் வெளிவந்த படம் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் மித்ரனின் இந்தப் பேட்டி கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமின்றி அந்தப் படம் வெளியான சமயத்தில் பாலக்காட்டு பக்கத்திலே பாடல் பெரும் ஹிட்டடித்தது. தற்போது அந்தப் பாடலையும், பின்னணி இசையையும் இமான் இசையமைத்தார் என தெரியவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் படத்தின் முழு பின்னணி இசையையும் இமான் அமைத்தாரா என்பது குறித்து அவர் கூறவில்லை.

Dhanush

மேலும் அந்தப் பேட்டியில் செல்வராகவன் குறித்தும், ரகுவரன் குறித்தும் பேசிய மித்ரன், “இயக்குநர் செல்வராகனுடன் பணிபுரியும்போது நிறைய தன்னம்பிக்கை கிடைக்கும். அவர் பெரிதாக எதையும் கற்றுக் கொடுக்க மாட்டார். ஆனால், நமக்கு முன் யார் இருந்தாலும் பயப்படக்கூடாது என்பதை மட்டும் சொல்லிக் கொடுத்தார். இயக்குநர் கே.பாலச்சந்தர்தான் செல்வராகவனுக்கு அதனை சொல்லிக் கொடுட்த்தாராம். அப்போதுதான், எதிரில் இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களிடம் வேலை வாங்க முடியும் என்று பாலச்சந்தர் சொல்லி கொடுத்ததை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

ரகுவரன் ஒரு மேஜிக் செய்வார்:

ரகுவரன், வில்லனாக மட்டும் இல்லாமல் அவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எனக்கு பிடிக்கும் என்பதால் அவர்தான் அப்பாவாக நடிக்க வேண்டும் என்று நான் பிடிவாதமாக இருந்தேன். அவருடன் வேலை செய்வது கடுமையாக இருக்கும் என்று கூறினார்கள். இருப்பினும் அவரை புக் செய்தேன். ஆனால், அவர் மிக ஆர்வமாக பணிபுரிந்தார். ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி காட்டுவார். அது அத்தோடு நிற்காமல், எடிட்டிங்கில் வேறு மேஜிக்கை செய்யும். டப்பிங்கில் மேலும் அதனை மெருகேற்றுவார்” என்று கூறியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.