விஜய் நடிப்பில் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் வாரிசு. வம்சி பைடிபல்லி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் ரிலீஸாக இருக்கிறது. இரண்டு பெரிய படங்களும் நேருக்கு நேர் மோத இருக்கும் நிலையில், வாரிசுக்கு ஆரம்பத்திலேயே சிக்கல்கள் எழத் தொடங்கியிருக்கிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் பொங்கலன்று வாரிசு படத்தை தெலுங்கில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் துணிவு படத்தின் தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வாங்கியிருப்பதால், அந்தப் படத்துக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த இரண்டு பெரிய பிரச்சனைகளையும் விஜய் இப்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், திடீரென பனையூரில் ரசிகர்களை சந்தித்திருக்கிறார் விஜய்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ரசிகர்களை நேரில் சந்தித்த அவர், வாரிசு படத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வாரிசு படத்துக்கு சிக்கல்கள் ஏற்படுத்துவோருக்கு மறைமுகமாக தனக்கிருக்கும் ரசிகர்களை பலத்தை காட்டுவதற்காகவும் இந்த முயற்சியை விஜய் எடுத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
Thalapathy Vijay Friends(Fans) meet #Varisu #VarisuPongal
— (@Harish_NS149) November 20, 2022
இது குறித்து சினிமா ஆர்வலர்கள் பேசும்போது, விஜய் போன்ற பெரிய நடிகர்கள் எல்லாம் தங்கள் படங்களுக்கு பிரச்சனை வரும்போது மட்டுமே ரசிகர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். மற்ற நேரங்களில் அவர்களை துளியும் மதிக்க மாட்டார்கள் என விமர்சித்துள்ளனர். வாரிசு படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் ரசிகர்களை சந்தித்து இருப்பதாகவும் சாடியுள்ளனர்.