விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும், கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள அந்த இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் நடிகர் விஜய் இன்று சந்தித்தார். இதனால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டர்களும், அவரின் ரசிகர்களும் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள, மதியம் தனது நீலாங்கரை வீட்டில் இருந்து கருப்பு நிற இன்னோவா காரில் நடிகர் விஜய் பனையூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
அவரை காண்பதற்காக அவரது இல்லத்தின் வாயிலில் காத்திருந்த ரசிகர்கள் அவரது காரை பின் தொடர்ந்தவாறு நீலாங்கரையில் இருந்து பனையூர் வரை சென்றனர். அப்பொழுது பனையூர் அருகே வரும்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், விஜயின் வாகனத்தை வேகமாக விரட்டியதில், நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு காதிலும், பின்னால அமர்ந்து வந்தவருக்கு கை மற்றும் கால் முட்டிகளில் சிறாய்ப்பும் ஏற்பட்டது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் பலத்த காயம் ஏற்படாதவாறு தப்பித்தனர். ஆனால், அவர்கள் வந்த இருசக்கர வாகனம் முற்றிலும் சிதைந்து போனது. விபத்து நடந்ததை பார்த்த பின்பும் விஜயின் வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இது அங்கிருந்தவர்களிடையே சிறு சலசலப்பை ஏற்படுத்தியது.
தலைவா pic.twitter.com/uyQ2l9UUW7
— RamKumarr (@ramk8060) November 20, 2022
ஒருவரின் காரை அனுமதியில்லாமல் இப்படி துரத்திச்செல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றாலும், காயமடைந்தவர்களை இறங்கி அறிவுரை கூறி சென்றிருக்கலாம் என விஜயை நோக்கி சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களை கருதி அவர் காரை நிறுத்தாமல் சென்றிருக்கலாம் என்றும் பதிலுக்கு கருத்து முன்வைக்கப்படுகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது வாரிசு. வம்சி பைடிபள்ளி இயக்கியிருக்கும் இப்படத்தை தில்ராஜு தயாரித்திருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். தமிழில் வாரிசு என்றும் தெலுங்கில் வாரசுடு எனவும் வெளியாகவிருக்கும் இப்படத்துக்கு ஆந்திராவில் புதிய சிக்கல் எழுந்திருக்கிறது.
எனவே, வாரிசு ரிலீஸ் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தவே, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்யவே இந்தச் சந்திப்பு என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி படத்துக்கு படம் ஏதாவது ஒரு சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. எனவே அதனை தடுக்கும் விதமாக விஜய் சில முடிவுகளை விரைவில் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதற்கான அச்சாரமாகவும், அதுகுறித்து ஆலோசிக்கும் விதமாகவும், இன்று இந்த சந்திப்பு அமைந்துள்ளது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பனையூர் அலுவலகத்தில் பிரியாணி தயாராகி வந்த ஒரு வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.