மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐந்த்ரிலா சர்மா என்ற நடிகை, கடந்த நவ. 1ஆம் தேதி மூளை பாதிப்பால் பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவளுக்கு மண்டையோட்டுக்குள் ரத்தக்கசிவு ஏற்பட்டது.
இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. மேலும் கடந்த நவம்பர் 14 அன்று, நடிகைக்கு அடுத்தடுத்து நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில், நடிகை ஐந்த்ரிலா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக, நடிகை ஐந்த்ரிலாவின் காதலன் சப்யசாச்சி சௌத்ரி சமூக ஊடகங்களில், ஐந்த்ரிலாவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களை வலியுறுத்தினார். அதில், “இதை இங்கே எழுதுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. இருப்பினும், இன்று எழுதியே ஆக வேண்டிய நாள். ஐந்திரிலாவுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். ஒரு அதிசயம் நடைபெற பிராத்தனை செய்யுங்கள். அவள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட அனைத்து தடைகளையும் எதிர்த்து போராடி வருகிறார்” என குறிப்பிட்டிருந்தார்.
ஐந்த்ரிலா சர்மா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர், மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்து வளர்ந்தவர். அவர் ‘ஜுமுர்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் அறிமுகமானார். ‘மகாபீத் தாராபீத்’, ‘ஜிபோன் ஜோதி’ மற்றும் ‘ஜியோன் கதி’ போன்ற நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். ‘அமி திதி நம்பர் 1’ மற்றும் ‘லவ் கஃபே’ போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
அவரின் இறப்புக்கு ரசிகர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று, கடந்த நவ. 11ஆம் தேதி, 46 வயதான இந்தி சின்னதிரை நடிகரான சிந்தாந்த் சூர்யவன்ஷி மாரடைப்பால் உயிரிழந்தது நினைவுக்கூரத்தக்கது.