நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டி20 போட்டி கடந்த வெள்ளிக்கிழமை அன்று தொடர் மழை காரணமாக, ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இன்று இரண்டாவது டி20 போட்டி நியூசிலாந்தில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இந்திய அணியின் ரிஷப் பண்ட் மற்றும் இசான் கிஷன் தொடக்கட்டக்காரர்களாக களமிறங்கினர். ரிஷப் பண்ட் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 51 பந்துகளில் 111 ரன்கள் (11 பௌண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார். இஷான் கிஷன் 36 (31 பந்துகள்) ரன்களும், ஹர்திக் பாண்டியா 13 (13 பந்துகள்) ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 13 (9 பந்துகள்) ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தனர். புவனேஸ்வர் குமாரும் சூரியகுமார் யாதவும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் டிம் சௌதி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், இந்த 3 விக்கெட்டுகளையும் கடைசி ஓவரில் ஹாட்ரிக்காக வீழ்த்தியிருந்தார் சௌதி. லாக்கி ஃபெர்குசன் 2 விக்கெட்டுகளும், இஷ் சோதி 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.
192 ரன்கள் இலக்காக கொண்டு களம் இறங்கினர், நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கான்வே. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் ஃபின் ஆலன் புவனேஸ்வர் குமாரிடம் ஆட்டம் இழந்தார். இதையடுத்து கேன் வில்லியம்சன் களமிறங்கினார். கான்வே மற்றும் கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடினர். தொடக்கம் முதலே பொறுமையாக விளையாடி வந்தது நியூசிலாந்து அணி. அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே 25 ரன்கள்(22 பந்துகள்) எடுத்து வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டம் இழந்தார். அணியின் கேப்டன் ஆன கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாடி 61(52 பந்துகள்) ரன்கள் எடுத்து சிராஜ் ஓவரில் ஆட்டம் இழந்தார். அடுத்தடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 18.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 126 ரன்கள் மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.!

இந்திய அணியின் பந்துவீச்சாளர் தீபக் ஹூடா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இப்படி ஒரு ஆல்ரவுண்டரைத்தான் இந்திய அணி உலகக்கோப்பை முழுக்க பென்ச்சில் வைத்திருந்தது.
முகமது சிராஜ் மற்றும் சஹால் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் விருதை சதமடித்த சூரியகுமார் யாதவ் பெற்றார்.