ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்எஸ்எஸ் ரவியாக இருப்பதால் எதிர்க்கிறோம்: வேலூரில் திருமாவளவன் பேட்டி

வேலூர்: ‘ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ் ரவியாக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம்’ என்று வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். வேலூரில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி: மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக தான் ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஒன்றிய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடைவெளி ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக இணைப்பு பலமாக இருக்க வேண்டியவர். ஆளுநர் மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர். ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டதல்ல மாநில அரசு.

இதை உணராமல் பாஜ ஆட்சியில்லாத  மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள், மாநில அரசுகளுக்கு நெருக்கடி தருகின்றனர். ஆளுநர்கள் ஆர்எஸ்எஸ் தொண்டர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள். ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்பதில்லை. ஆனால் ஒரு இயக்கத்தை சார்ந்து, ஆர்எஸ்எஸ் அரசியலை பேசுகிறார்கள். ஆளுநர் ஆர்என்.ரவி ஆர்எஸ்எஸ் ரவியாக இருப்பதால் அவரை எதிர்க்கிறோம். அதிமுகவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னால் அவர் சரியாக அரசியல் செய்கிறார் என்று அர்த்தம். ஆனால் பாஜவை பார்த்து திமுக பயப்படுகிறது என்று அவர் கூறினால், எடப்பாடி பழனிசாமி பாஜவின்  குரலாகத்தான் ஒலிக்கிறார். அவர் அதிமுகவை கரைய விட்டுவிட்டார், கைவிட்டு விட்டார் என்று எண்ண தோன்றுகிறது.

ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சட்டப்படி விடுதலை வழங்குவதற்கு முகாந்திரம்  இருந்ததாலேயே உச்சநீதிமன்றம் 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனாலும் ஒன்றிய அரசு இதை எதிர்த்து சீராய்வு மனுவுக்கு போயிருப்பது எதிர்பார்த்ததுதான். இந்த சீராய்வு மனுவால் இவர்கள் விடுவிக்கப்பட்டதை தடுக்க முடியாது. சீராய்விலும் 6 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் உறுதி செய்யும் என்பதை நம்புகிறோம். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை பாஜக முகவர்தான். மத்திய ஊடகங்கள் பாஜவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. இந்த மாயத்தோற்றம் தமிழ்நாட்டில் எடுபடாது. தமிழ்நாட்டில் பாஜவை கண்டு யாரும் அச்சப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.