கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான கொடிசியாவின் கூட்டம், ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவ சண்முக குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பிறகு அவர்கள் கூறும்போது, “குறு, சிறு தொழில் முனைவோர் கடுமையான தொழில் நெருக்கடிகளில் இருந்து மீண்டுவர முடியாமல் உள்ளனர். இந்நிலையில், மின்சார வாரியம் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளதால், தொழில்முனைவோர் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
ஜாப் ஆர்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் செய்து கொடுக்கும் தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரத்தை இந்த கட்டண உயர்வு முடக்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தில் குறு, சிறு தொழில் முனைவோருக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேர (பீக் ஹவர்) கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.
மின் கட்டண உயர்வுக்கு முன் இருந்ததுபோல 112 கிலோ வாட் வரை, கிலோ வாட்டுக்கு ரூ.35 மட்டும் மாத கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.