வேலூர்: கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த ரூ.97 லட்சம் மோசடியில் குடியாத்தம் கூட்டுறவு வங்கி கிளையின் பெண் மேலாளர் பணி நீக்கத்தை தொடர்ந்து, மேலும் 2 அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை குடியாத்தத்தில் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது இந்த வங்கியில் 2018-19ல் மகளிர் சுய உதவிகுழுக்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, ரூ.97 லட்சம் கடன் மோசடியில் கிளை மேலாளர் உமா மகேஸ்வரி ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து கடந்த ஜூன் மாதம் வேலூர் வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து உமாமகேஸ்வரியை கைது செய்தனர். இதையடுத்து, உமாமகேஸ்வரி அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடந்த விசாரணையில் குடியாத்தம் கூட்டுறவு வங்கி கிளையின் மற்றொரு மேலாளராக பணியாற்றி வந்த ஜெயக்குமார், உதவி மேலாளர் அம்பிகா ஆகியோர் உமாமகேஸ்வரிக்கு உடந்தையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் இருவரும் வேறு கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில் மோசடி தொடர்பாக ஜெயக்குமார், அம்பிகா ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் அதிரடியாக பணி நீக்கம் செய்து, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.