சிங்கப்பூர் அதிபருக்கு பிடித்த தேவாவின் பாடல்… ரஜினி சொன்ன சூப்பர் தகவல்!

இசையமைப்பாளர் தேவா நேற்று (நவ. 20) அவரது 72ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினார். அவரது பிறந்தநாளை இன்னும் சிறப்பாக கொண்டாடும் வகையிலும், ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவும் தேவாவின் இசை நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை பிளாக் ஷீப் ஒருங்கிணைத்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள், பாடகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியின்போது, ரஜினிகாந்த் மேடையில் தேவா குறித்து உரையாற்றினார். 

மாஸ் என்ட்ரி

முன்பாக, பாட்ஷா படத்தின் மாஸான பிஜிஎம் ஒலிக்க, அந்த படத்தின் பாணியில் கோட்சூட் போட்ட நால்வருடன் ரஜினிகாந்த் மேடையேறியது, அரங்கையே அதிரச்செய்தது. 

மேடையில் பேசிய ரஜினி,”சிங்கப்பூர் அதிபராக இருந்தவர், நாதன். தமிழரான அவர் மலேசியாவில் வாழ்ந்தவர். அவர் இறப்பதற்கு முன், அவருடயை உயிலில் கடைசி ஆசையாக, சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் படத்தில் இடம்பெற்ற, தேவா இசையமைத்து, வைரமுத்து வரிகளில்  வந்த ‘தஞ்சாவூரு மண்ணு’ பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல். தான் இறந்த பிறகு அந்த பாடலை ஒலிக்கவிட்டு, அதன்பின் தனது உடலை எடுத்துச்செல்ல வேண்டும் என கூறியிருந்தார். 

சிங்கப்பூர் அதிபர் நாதன் உயிரிழந்தபின் அவரது உடலை கொண்டுசென்றபோது, உலகத் தலைவர்கள் முன்னிலையில் அந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இந்த பாடலை சிங்கப்பூர், மலேசியா, தாய்லாய்ந்து, ஹாங்காங் என பல நாடுகளில் அந்த பாடலை மொழிபெயர்த்து அதன் பத்திரிக்கையில் விளக்கியிருந்தனர். ஆனால், எந்த தமிழ் ஊடகமும் அதுகுறித்து எழுதவில்லை. 

ரஜினி – தேவா காம்போ

அவருக்கு மனது எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். இதனால், தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் வெளி உலகிற்கு சொல்லுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார். அந்த நிகழ்ச்சிக்கு சென்ற பார்வையாளர்கள் எடுத்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘தேனிசை தென்றல்’ தேவா, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் தொடக்க காலத்தில் கானா மூலம் புகழ்பெற்றார். இவர், ரஜினியுடன் ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘அருணாசலம்’ படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அண்ணாமலை படத்தின் டைட்டில் கார்டு பிஜிஎம்தான் தற்போதும் ரஜினி செல்லும் இடமெல்லாம் பின்தொடர்கிறது. வந்தேன்டா பால்காரன், ஆட்டோகாரன் ஆட்டோகாரன் உள்ளிட்ட வெகுஜன மக்களுக்கு நெருக்கமான பாடல்கள் என்னென்றும் தேவாவின் புகழை எடுத்துக்கூறுபவையாக நிலைத்து நிற்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.