புதுடில்லி : புதுடில்லி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான, ‘சீட்’களை ஆம் ஆத்மி கட்சியினர் பணத்திற்கு விற்பனை செய்யும், ‘வீடியோ’ காட்சிகளை பா.ஜ., வெளியிட்டு
உள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. புதுடில்லி மாநகராட்சிக்கான தேர்தல் அடுத்த மாதம் 4ம் தேதி நடக்கிறது.
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர்களை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட்களை விற்பனை செய்வது தொடர்பான பேரத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளை பா.ஜ., வெளியிட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பிந்து என்ற தொண்டர், இந்த வீடியோ காட்சிகளை ரகசியமாக படம் பிடித்துள்ளார். இதில், வடமேற்கு டில்லியின் ரோகிணியில் உள்ள வார்டு ஒன்றில் போட்டியிட, அவர் சீட் கேட்கிறார். 80 லட்சம் ரூபாய் கொடுத்தால் சீட் கிடைக்கும் என, ஆம் ஆத்மி தலைவர்கள் பேரம் பேசுகின்றனர்.
லோக்சபா தொகுதியான வடமேற்கு டில்லியின் ஆம் ஆத்மி பொறுப்பாளர் ஆர்.ஆர்.பதானியா மற்றும் ரோகிணி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் புனித் கோயல் ஆகியோர் இந்த பேரத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் ஆம் ஆத்மியின் ஐந்து நபர் கமிட்டி உறுப்பினர்களுடன், இந்த இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பணம் கொடுப்பவர்களுக்கு 110 வார்டுகளை ஆம் ஆத்மி ஒதுக்கி உள்ளது, இந்த வீடியோவில் தெளிவாகிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் ஊழலில் திளைப்பதை இந்த வீடியோ உறுதி செய்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement