சென்னை: ஆளுநர் ரவி நேற்று காலை திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை திரும்பபெற வலியுறுத்தி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் குடியரசுத்தலைவரிடம் மனு அளித்துள்ளனர். அப்போது, ஆளுநர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் திருவனந்தபுரம் சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. அங்கு லோக் ஆயுக்தா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவர், ‘அரசின் மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட மறுப்பதற்கு காரணம் இருக்கும். ஆளுநர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. லோக் ஆயுக்தா போன்ற அமைப்பு தோல்வியடையாமல் இருப்பதை உறுதி செய்வது
ஆளுநர் உட்பட அரசியலமைப்பு அலுவலகங்களின் கடமை’ என்று பேசியிருந்தார்.
இதுதுவிர, தமிழகத்தில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ள நிலையில், மத்திய அரசு இதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை 10.20 மணிக்கு ஆளுநர் ரவி திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவரது பயண விவரம் வெளியிடப்படாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படு கிறது. அவர் இன்று இரவு சென்னை திரும்புவார் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநரின் இந்த டெல்லி பயணத்தால்
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.