விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள செங்கேணிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், செஞ்சி அடுத்த நெகனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராணி-க்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. செல்வராஜுக்கும் ராணிக்கும் இடையே அவ்வப்போது குடும்ப பிரச்னை ஏற்படுமாம். இந்நிலையில், நேற்று முந்தினம் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே மனமுடைந்து காணப்பட்ட ராணி, மாலை செங்கேணிகுப்பத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளிமேடு பேட்டை காவல்துறையினர், ராணியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகளிடம் வரதட்சணை கேட்டு செல்வராஜ் அடிக்கடி பிரச்னை செய்து வந்ததாவும், அவ்வப்போது சமாதானம் செய்து வைத்ததன் பேரில் தன் மகள் அங்கு வாழ்ந்து வந்ததாகவும், அவளுடைய மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்றும் ராணியின் தந்தை வெள்ளமேடு பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆகிறது என்பதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.