புதுச்சேரி: இருசக்கர வாகனத்தில் கர்ப்பிணி மனைவியை ஜிப்மரில் சேர்க்க உதவிக்காக உறவுப்பெண்ணுடன் மூவராக வந்ததால் அபராதம் விதித்து பணம் இல்லாததால், வாகன சாவியைப் பிடுங்கி ஒரு மணி நேரத்துக்கு மேல் போலீஸ் எஸ்ஐ காக்க வைத்தார். இதையடுத்து, பொதுமக்கள் தலையிட்டதால் சாவியை திருப்பித் தந்தார்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தமிழகப் பகுதியிலிருந்து தனது கர்ப்பிணி மனைவி இலக்கியாவைச் சேர்க்க பிரசவத்துக்குச் சேர்க்க கணவர் முரசொலி வந்துள்ளார். வீராணத்தைச் சேர்ந்த அவர் இருசக்கர வாகனத்தில் வரும்போது உதவிக்காக தனது மனைவியை பிடித்துக்கொள்ள தனது உறவுப் பெண்ணையும் அழைத்து மூவராக வந்துள்ளனர். இந்நிலையில், ஜிப்மர் அருகே அதிமுக போராட்டம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மூவரும் வந்ததால் போக்குவரத்து காவல் பிரிவு எஸ்ஐ ஆறுமுகம் வண்டியை தடுத்து நிறுத்தினார். மூவரையும் இறங்கும்படி கூறினார். அப்போது கர்ப்பிணி பெண்ணின் கணவர் முரசொலி, ”இன்று தலைப் பிரசவத்துக்காக மனைவியை ஜிப்மரில் சேர்க்க மருத்துவர்கள் வரச்சொல்லியுள்ளனர். நாங்கள் ஏழைகள். மனைவியை டூவிலரில் வரும்போது பிடித்துக் கொள்ளவும் உதவிக்காகவும் உறவுப் பெண்ணை அழைத்து வந்தேன்” என்று கூறினார். ஆனால், போக்குவரத்து எஸ்ஐ ஆறுமுகம் அதை ஏற்கவில்லை.
உடனிருந்த காவலரிடம் அபராதம் விதிக்கக் கூறினார். இதையடுத்து ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், முரசொலி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால் வாகனத்தின் சாவியை எஸ்ஐ எடுத்துச் சென்றுவிட்டார். சுமார் ஒரு மணிநேரம் வரையில் அங்கு கர்ப்பிணி பெண் தவித்தப்படி நின்றிருந்தார்.
அங்கிருந்தோர் அதைக் கேட்டு பாதுகாப்பு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கிருந்த பத்திரிகையாளர்களும் விசாரிக்கத் தொடங்கினர். அதையடுத்து, எஸ்ஐ ஆறுமுகம் எடுத்து வைத்திருந்த வாகன சாவியை தர அறிவுறுத்தப்பட்டது. போலீஸார் எஸ்ஐயை அழைத்து வந்தனர். அவர் தன்னிடம் இருந்த சாவியை எடுத்து தந்தவுடன், தனது மனைவியை மருத்துவமனையில் சேர்க்க ஜிப்மருக்கு புறப்பட்டார்.