மங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோ வெடித்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள
என்ஐஏ அதிகாரிகள் மற்றும் போலீஸார், ஆட்டோவில் பயணம் செய்தவரிடமிருந்து போலி ஆதார் கார்டு ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில், இது விபத்து அல்ல, தீவிரவாத சதிச் செயல் என்று கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
மங்களூருவில் நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்த ஓர் ஆட்டோ திடீரென வெடித்து, தீப்பற்றி எரிந்தது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், அதில் பயணம் செய்தவரும் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலில் இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு, எரிந்த நிலையில் இருந்த குக்கர் மற்றும் பேட்டரிகள், சர்க்யூட் வயர்களைக் கைப்பற்றினர். மேலும், ஆட்டோவில் பயணம் செய்த நபரிடமிருந்து ஓர் ஆதார் அட்டையை கைப்பற்றினர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “மங்களூருவில் ஆட்டோ வெடித்தது விபத்து அல்ல. சேதம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத செயல். இது தொடர்பாக மத்தியப் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, மாநில காவல் துறையினரும் விசாரித்து வருகின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், டிஜிபி பிரவீன் சூட் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மங்களூருவில் வெடித்த ஆட்டோவில் பயணித்தவர், போலி ஆதார் அட்டை வைத்திருந்தார். இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில் பயணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோயம்புத்தூரில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்துக்கும், மங்களூருவில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஆட்டோவில் பயணம் செய்தவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “ஆட்டோ வெடித்ததில் தீவிரவாத தொடர்பு இருக்கிறதா என விசாரிப்பதற்காக மத்தியப் புலனாய்வு அமைப்பினர் மங்களூரு வந்துள்ளனர். ஓரிரு நாட்களில் இதுகுறித்த உறுதியான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.
இந்த சம்பவம் தீவிரவாத செயல் என்று தெரிய வந்துள்ளதால், தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) 5 பேர் கொண்ட குழு மங்களூரு வந்துள்ளது. சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, முதல்கட்ட விசாரணை மேற்கொண்ட என்ஐஏ குழு, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அதில் பயணம் செய்தவரிடம் விசாரணை நடத்தவும்
திட்டமிட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணை குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “ஆட்டோவில் பயணித்த நபர், வேறு ஒருவரின் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி (போலி பெயரில்), கோயம்புத்தூரில் செல்போன் சிம் கார்டு வாங்கி உள்ளார். அந்த சிம் கார்டு சிக்னலை ஆய்வு செய்தபோது, அவர் தமிழகத்தின் பல இடங்களுக்குச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. அவர் யார், யாருடன் பேசினார் என்பது குறித்து ஆய்வு செய்து
வருகிறோம்” என்றனர்.
காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இப்போது பேச முடியாத
நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷரீக் வீட்டில் சோதனை
ஆட்டோவில் பயணித்தவர் பெயர் ஷரீக் என்பதும், அவர் மைசூருவிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாதஹள்ளியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸாரும், வெடிகுண்டு நிபுணர்களும் ஷரீக் வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்போன் பழுதுபார்ப்பு பயிற்சி பெறுவதற்காக இங்கு வந்திருப்பதாக ஷரீக் தெரிவித்தார் என்று அந்த வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார். இந்த சோதனையில் வெடிபொருட்கள், சர்க்யூட்-கள் மற்றும் சில போலி ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறும்போது, “ஆட்டோவில் பயணம் செய்த நபர் வெடி பொருட்கள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அவருக்குத் தீவிரவாத தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, இது தீவிரவாத தாக்குதல்தான்” என்றார்.
இதற்கிடையே, மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், மைசூரு மாநகர காவல் ஆணையர் ரமேஷுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, நகரில் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்துமாறும் காவல் ஆணையரிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
போலி ஆதார் அட்டை ஷரீக்கிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் அட்டை, கர்நாடகாவின் ஹூப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த பிரேம் ராஜ் ஹுதாகி என்பவருடையது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருடன் தொலைபேசியில் போலீஸார் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது, துமக்கூரு ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்பாளராக பணிபுரிவதாக பிரேம் ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தனது ஆதார் அட்டையைத் தொலைத்துவிட்டதாகவும், பின்னர் போலி ஆதார் அட்டை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, கோயம்புத்தூர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்துக்கும், மங்களூரு சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கிறதா என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.