மாபெரும் வேலை வாய்ப்பு திருவிழா; 71,000 பேருக்கு வேலை வழங்கும் பிரதமர் மோடி!

புது தில்லி: மாபெரும் வேலைவாய்ப்பு திருவிழா என்னும் திட்டத்தின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட சுமார் 71,000 பேர்களுக்கு பணி நியமனக் கடிதங்களை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று விநியோகிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் இருந்து தேர்வாகும் நபர்கள், அமைச்சகங்கள், மத்திய அரசுத் துறைகளில் பணிகளில் சேருவார்கள். 

மாபெரும் வேலை வாய்ப்பு திஒருவிழா என்பது வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான ஒரு திட்டமாகும். ரோஸ்கர் மேளா என்னும் இந்த திட்டத்தில், வேலைவாய்ப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்குவதும், தேசிய வளர்ச்சியில் நேரடியாக பங்கேற்பதற்கு அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் திட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அக்டோபர் மாதம், நடந்த மாபெரும் வேலை வாய்ப்பு விழாவில் புதிதாக நியமிக்கப்பட்ட 75,000 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. 

“புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கான நியமனக் கடிதங்களின் நகல் நாடு முழுவதும் (குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் தவிர) 45 இடங்களில் ஒப்படைக்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரப்பப்பட்ட பணியிடங்கள் தவிர, ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், ரேடியோகிராபர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப மற்றும் துணை மருத்துவ பணியிடங்களும் நிரப்பப்படுகின்றன. பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPF) கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்களும் உள்துறை அமைச்சகத்தால் நிரப்பப்படுகின்றன. மேலும் கர்மயோகி பிரரம்ப் என்னும், வேலையில் கடைமையை சிறப்பாக நிறைவேற்றுவது தொடர்பாக இளைஞர்களுக்கு வழிகாட்டும் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார் என்று பிஎம்ஓ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு அரசு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்படுபவர்களுக்கான வேலை தொடர்பான, ஆன்லைன் பயிற்சி பாடத்தில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், பணியிட நெறிமுறைகள் மற்றும் ஒருமைப்பாடு, மனித வளக் கொள்கைகள் மற்றும் பிற நன்மைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆகியவை அடங்கும். அவை கொள்கைகளை பின்பற்றி நடப்பதற்கும், புதிய வேலையை கற்றுக் கொண்டு சுமூகமாக பணியாற்றுவதற்கும் இளைஞர்களுக்கு உதவும். இளைஞர்கள் தங்கள் அறிவு, திறன்கள் மற்றும் திறன்களை மேம்படுத்த igotkarmayogi.gov.in தளத்தில் மற்ற பாடங்களையும் ஆராய்ந்து கற்கலாம்” என்று PMO அறிக்கை ஒன்று கூறியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.