மதுரை: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, ரூ.2.50 லட்சத்துக்கு அதிகமான வருமானத்துக்கு வருமான வரி வசூலிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு செயலர்கள் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே குன்னூரைச் சேர்ந்த குன்னூர் சீனிவாசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினராக உள்ளேன். ஒன்றிய அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 103வது திருத்தத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 2019ல் ஒன்றிய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரை, கண்டறிவது தொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் ஒருவரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்றும், கணக்கெடுப்பின்போது அந்த குடும்பத்திற்கு நகர்ப்புறங்களில் ஆயிரம் சதுர அடிக்கு கீழ் குடியிருக்கும் வீடு இருந்தாலோ, விவசாய நிலம் 5 ஏக்கருக்கு கீழ் இருந்தாலோ, கிராம பகுதியில் 100 சதுர கெஜம் அளவிற்கு கீழ் வீட்டுமனை இருந்தாலோ அது கணக்கில் வராது.
இந்த 103வது சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றமும் சட்டத் திருத்தம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரை அடையாளம் காண ரூ.8 லட்சம் வரை குடும்ப வருமானம் உள்ளவரை, பொருளாரத்தில் பின்தங்கியவராக கருதும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 2022ம் ஆண்டு வருமான வரி சட்டப்பிரிவின்படி, ரூ.2.50 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள அனைவரும் வருமான வரி கட்ட வேண்டியது அவசியம். முன்னேறிய வகுப்பினரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவரை பொருளாதாரரீதியாக பின்தங்கியவராக கருதும்போது, ரூ.2.5 லட்சத்திற்கு மேல் ரூ.8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிப்பது முற்றிலும் தவறு.
இது சமுதாயத்தில் பொருளாதாரரீதியாக ஏற்றத்தாழ்வையே உருவாக்கும். எனவே, ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானமுள்ள தனி நபருக்கு வரி விதிக்கும் வருமான வரி சட்டப்பிரிவு செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், ஒன்றிய சட்டம் மற்றும் நிதியமைச்சக செயலர்கள், பொது நிர்வாகம் மற்றும் ஓய்வூதிய துறை செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.