உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில்… பக்தர்களுக்கு பேரருள்… இன்னும் 4 மாதங்கள் தான்!

ஈரோடு மக்களுக்கு மட்டுமின்றி பைரவரை வணங்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளிவந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில் ராட்டை சுற்றிபாளையத்தில் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதன் பணிகள் எப்போது முடிவடையும்? அங்கு என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன? எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்? பைரவரின் தரிசனம் எப்போது கிடைக்கும்? போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில், ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோட்டில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை சுற்றிபாளையத்தில் உலக புகழ்பெற்ற பைரவர் கோயில் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இந்த கோயில் கட்டுமான பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாது 39 அடி காலபைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டு உள்ளது. இந்த சிலை “Unique Book of World Record” என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. கோயில் திருப்பணியானது கடந்த 7 ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல குருமார்களின் ஆசியும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் தான் காரணம்.

அடுத்தகட்ட விஷயங்கள் குறித்து முடிவு செய்துள்ளோம். அதாவது, வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் விழா மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரின் அருளின் பெற்று செல்ல வேண்டும். இந்த கோயிலில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ள 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும், நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும்.

மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நான்கு கால பூஜையாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் 10.3.2023 அன்று மாசி மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சுவர்ண ஆகர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொதுமக்களால் நெய் அபிஷேகம் செய்யப்படும். இதையடுத்து 11.3.2023 அன்று மாசி மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெறும்.

அதன்பிறகு முதற்கால பூஜை ஆரம்பமாகும். பிற்பகல் 2.30 மணிக்கு அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொதுமக்களால் தீர்த்தம் எடுத்து வரப்படும். இந்த தீர்த்த ஊர்வலமானது யானை, குதிரை கிராமிய நிகழ்ச்சி மற்றும் வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறுகிறது. பின்னர் 12.3.2023 மாசி மாதம் 28ஆம் நாள் காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை ஐந்து மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா நடைபெறும்.

இந்நிலையில் வரும் 13.3.2023 திங்கட்கிழமை அன்று காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை மற்றும் சரியாக 10.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெறும். அதுமட்டுமின்றி 10.3.2023 வெள்ளிக்கிழமை முதல் 13.3.2023 திங்கள்கிழமை வரை கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும் என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.