இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கு கலந்தாலோசித்து, வாய்ப்புக்களை வழங்குவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சிறி டொல்வத்த இது தொடர்பான தனியார் சட்ட மூலமொன்றை பாராளுமன்றத்தில் இன்று (22) சமர்ப்பித்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
இது இளைஞர் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை உள்ளூராட்சி சபைகளில் அதிகரிக்கும் நோக்கில் அதற்கான சூழலை உருவாக்குவதற்காகவும் பொருத்தமான சட்டமூலமாக இது பாராளுமன்றத்தில் அடையாளப்படுத்தப்பட்டது.
அதற்கிணங்க தெரிவுசெய்யப்படவுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25வீதத்திற்கு இளைஞர்களை உள்வாங்கும் வகையில் மாகாண சபைத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஏலவே, மாகாண சபைத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் தற்போதைய ஏற்பாடுகளின் படி பெண்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கும் வகையில் முதலாவது நியமனப் பத்திரத்தின் பிரகாரம் மற்றும் இரண்டாவது நியமனப்பத்திரத்தின் படி தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 25வீதமானவர்கள் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.