புதுடெல்லி: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் புதிய தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த மே மாதம் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திரா ஓய்வு பெற்றார். அதன் பின்னர் அந்த பொறுப்பு காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் புதிய தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டார். இவர் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி 60 வயதில் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக நவம்பர் 18ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். இவர் முறைப்படி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண் கோயல் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டேவுடன் இணைந்து பணியாற்றுவார். குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் இரண்டு கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
