சென்னையில் பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த புதிய பேருந்து நிலையம் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் வீட்டு வசதி துறை மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “கிளாம்பாக்கத்தில் அமையும் புதிய பேருந்து நிலையத்தின் அடிப்படை கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிட்டது. மின் இணைப்பு உள்ளிட்ட இதர வேலைகள் நடைபெற்ற வருகிறது. தற்பொழுது நடைபெற்று வரும் பணிகள் கூடிய விரைவில் நிறைவடைந்து வரும் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என பேட்டியளித்தார். இதனால் பொங்கலுக்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் தென் மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் பேருந்து பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.