ரத்தன் டாடாவின் பயோபிக்கை திரைப்படமாக இயக்கும் சுதா கொங்கரா? – வெளியான தகவல்

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி, அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா திரைப்படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுதா கொங்கரா. இவர் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து, தயாரித்திருந்தப் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், மோகன் பாபு, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியாகமல் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

image

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி தீர்த்தநிலையில், சிறந்தப் படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என்றப் பிரிவுகளில், இந்தப் படம் 5 தேசிய விருதுகளைப் பெற்று அசத்தியது. இந்தப் படம் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வரும்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா, அடுத்ததாக பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

image

இந்தப் படத்தின் முதல்கட்ட கதை ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு இந்தப் புதியப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் ஆகிய இருவருரில் ஒருவர் ரத்தன் டாடா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரலாம் என்று தெரிகிறது.

முன்னதாக, அபிஷேக் பச்சன் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி சகோதரர்களின் தந்தையும் ரிலையன்ஸ் இண்டன்ஸ்டீஸ் நிறுவனருமான திருபாய் அம்பானியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட குரு திரைப்படத்தில் நடித்திருந்தார். மணி ரத்னம் இயக்கியிருந்த அந்த படம் மெகா ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. திருபாய் கதாபாத்திரத்தில் தன்னுடைய அச்சத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அபிஷேக் பச்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.