புதுடில்லி :’தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, அரசியல் சாசனம் பெரிதாக குறிப்பிடாததால் அது இஷ்டத்துக்கு மீறப்படுகிறது.
ஆனால், ௭௨ ஆண்டுக்குப் பின்னும் உரிய சட்டம் இயற்றப்படவில்லை’ என, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமனங்களை, உச்ச நீதிமன்றத்தில், ‘கொலீஜியம்’ முறை இருப்பது போல் தேர்வு செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளை, நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமர்வு கூறியதாவது:
தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக, அரசியல் சாசனத்தின், ௩௨௪வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமை தேர்தல் கமிஷனர் என்பவர், ஆறு ஆண்டு அல்லது ௬௫ வயது வரை பதவியில் இருக்கலாம்.
ஆனால், இந்த சட்டப் பிரிவை, மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தொடர்ந்து தங்கள் இஷ்டத்துக்கு மீறி வருகின்றனர். கடந்த, ௨௦௦௪ல் இருந்து, ௨௦௧௪ வரை, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஆறு தலைமை தேர்தல் கமிஷனர்கள் இருந்துள்ளனர்.
தற்போதுள்ள பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின், எட்டு ஆண்டுகளில், எட்டு தலைமை தேர்தல் கமிஷனர்கள் இருந்துள்ளனர்.
இந்தப் பதவியில், முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே நியமிக்கப்படுகின்றனர். அவர்களுடைய வயது அரசுக்கு தெரியும். அதிக காலம் அவர்கள் பதவியில் இல்லாத வகையில், ௬௫ வயதை நெருங்கும் நேரத்தில் பதவி அளிக்கின்றனர்.
கடந்த, ௧௮ ஆண்டுகளில், எந்த ஒரு தலைமை தேர்தல் கமிஷனரும், இரண்டாண்டு வரை பதவியில் இருந்ததில்லை.
இந்த சட்டப் பிரிவின்படி, தலைமை தேர்தல் கமிஷனர் நியமனம் தொடர்பாக பார்லிமென்டில் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ௭௨ ஆண்டாகியும் அதற்கான முயற்சி துவங்கவில்லை.
மத்தியில் ஆளும் கட்சிகள், தங்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் நியமனங்களை செய்து வருகின்றன. இதில், கட்சிகளுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை.
இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.
வழக்கின் விசாரணை இன்றும் தொடர்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்