நரசிங்பூர்: ‘அரிவாள்’ நோயில் இருந்து தப்பிக்க நரசிங்பூர் பகுதியினர் திருமணத்திற்கு முன் ரத்த பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் மத்திய பிரதேச ஆளுநர் வலியுறுத்தினார். மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், நரசிங்பூர் மாவட்டத்தில் மரபணு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘அரிவாள் செல் நோய் என்பது பரம்பரை பரம்பரையாக வரும் மரபணு சார்ந்த நோயாகும்.
ரத்த சிவப்பணுக்களின் வழியாக இந்நோய் ஊடுருவுகிறது. ‘அரிவாள்’ போன்று (ஆங்கில எழுத்து ‘சி’ வடிவத்தில்) அதன் செல்கள் உள்ளதால், அவ்வாறு அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. எனவே அரிவாள் மரபணு நோயிலிருந்து விடுபட, இப்பகுதியினர் திருமணம் செய்து கொள்ளும் முன், ஆண் – பெண் இருவரும் ரத்தப் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.
இருவருக்கும் நோயின் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் இருவரும் திருமணம் செய்யக்கூடாது. இதன் மூலம் சந்ததியினருக்கு இந்த மரபணு நோய் பரவாமல் தடுக்க முடியும். அரிவாள் மரபணு நோய் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். பழங்குடியினர் மற்றும் பொதுமக்களிடையே அரிவாள் செல் ரத்த சோகை குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இந்த நோயிலிருந்து விடுபட தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.