கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு கோவா அரசு நோட்டீஸ்

பனாஜி,

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியமான வீரர்களில் இடதுகை ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் ஒருவர். 20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணிகளில் இடம்பிடித்தவர். நீண்ட நாட்களாக வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த யுவராஜ் சிங், கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் விலகினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு விளம்பர படங்களில் யுவராஜ் சிங் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் பல தனியார் தொழில்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இந்தியாவின் முக்கியமான சுற்றுலா தளமான கோவாவில் யுவராஜ் சிங்கிற்கு சொந்தமான ஒரு சொகுசு வீடு உள்ளது. இங்கு அவர் அடிக்கடி குடும்பத்தினருடன் சென்று நேரத்தை செலவிடுவார். அதனை தற்போது விடுதியாக மாற்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடைகைக்கு விடுகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில், தனக்கு சொந்தமான காசா சிங் வீட்டில் பல்வேறு சுவாரஸ்ய நினைவுகள் உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களாகிய நீங்கள் அதையெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக ‘புக்’ செய்துக்கொள்ளலாம் என அறிவித்தார். யுவராஜின் இந்த நடவடிக்கை தான் கோவாவின் அரசு விதிமுறைகளுக்கு எதிரானவை ஆகும்.

கோவாவில் ஒருவர் விடுதி நடத்த வேண்டுமென்றால், அரசிடம் விண்ணப்பித்து, அதற்கான அனுமதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அதை செய்யாமல் யுவராஜ் சிங் இப்படி செய்துள்ளார். எனவே கோவாவின் சுற்றுலா துறை இயக்குநர் சார்பில் ராஜேஷ் காலே, வரும் டிசம்பர் 8ம் தேதி 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.

அதுவரை அது விடுதியாகாது. ஒருவேளை அரசு அனுப்பிய கடிதத்திற்கு யுவராஜ் சிங் எந்தவொரு பதிலும் தரவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கருதி, அவருக்கு குறைந்தது ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.