
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற உள்ளது.
10 நாட்கள் நடைபெறவுள்ள இந்த திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற டிசம்பர் 6-ம் தேதி காலை 6 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2268 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த தீப தரிசனத்தைக் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தினரால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகமும் இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரப் பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் 4 அரசு சில்லறை மதுபானக் கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த 5 உரிமம் பெற்ற மதுக்கூடங்களை டிசம்பர் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 6 நாட்கள் மூடி வைக்க கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.