செயின்ட் லூயிஸ்: கொலை வழக்கில் தன் தந்தைக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்றுவதை நேரில் பார்ப்பதற்கு அனுமதி கேட்டு அவருடைய மகள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கான்சாஸ் நகரைச் சேர்ந்த கெவின் ஜான்சன், 37, என்பவருக்கு போலீஸ்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரண தண்டனை, நவ., 29ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
கடந்த, 2005ல், 19 வயதில் இருந்த கெவின் ஜான்சன் மீது தன் காதலியை தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ‘சம்மன்’ வழங்க அவருடைய வீட்டுக்குப் போலீசார் சென்றனர். அப்போது அவருடைய 12 வயது சகோதரருக்கு பயம் மற்றும் அதிர்ச்சியில் வலிப்பு ஏற்பட்டது. மேலும் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நடந்த போது சகோதரனுக்கு உதவுவதற்கு தன்னையும் தன் தாயையும் போலீசார் அனுமதிக்கவில்லை என்று கெவின் ஜான்சன் ஆத்திரமடைந்தார். இந்நிலையில் சகோதரன் இறந்த தினத்தின் மாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த வில்லியம் மெக்கென்டி என்ற அந்த போலீஸ் அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் ஜான்சன்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜான்சன், சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது இரண்டு வயதாக இருந்த அவருடைய மகள், கோர்ரி ராமே, இத்தனை ஆண்டுகளாக சிறையிலேயே தன் தந்தையை சந்தித்து வந்துள்ளார்.
தற்போது 19 வயதாகும் ராமே தன் தந்தைக்கு விஷ மருந்து செலுத்தி தண்டனை நிறைவேற்றப்படுவதை நேரில் பார்ப்பதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். மிசோரி சட்டங்களின்படி 21 வயதுக்கு கீழுள்ளோர் மரண தண்டனை நிறைவேற்றுவதை நேரில் பார்ப்பதற்கு அனுமதியில்லை.
‘என் தந்தை மருத்துவமனையில் இருந்திருந்தால் அவர் உயிரிழக்கும் வரை உடன் இருந்திருப்பேன். தற்போது அந்த வாய்ப்பை எனக்கு அளிக்க வேண்டும். இது மன ரீதியில் எனக்கு திருப்தியை தரும்’ என, அவர் மனுவில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement