திறமையான இயக்குனர்களால் தான் நல்ல நடிகர்களை உருவாக்க முடியும் : எஸ்.ஜே.சூர்யா

ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் வெப் தொடர் வதந்தி. புஷ்கர், காயத்திரி தயாரித்திருக்கும் இந்த வெப் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா, விவேக் பிரசன்னா, நாசர், லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வலைதள தொடருக்கு சைமன் கே கிங் இசையமைத்திருக்கிறார். டிசம்பர் 2ம் தேதி முதல் வெளியாகிறது.

இதன் முன்னோட்டம் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது: இந்தத் தொடரின் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் என்னுடைய உதவியாளர். அவரது இயக்கத்தில் முதன்முதலாக வலைதள தொடரில் நடிப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இவர் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டில் என்னிடம் ஒரு கதையை சொன்னார். அப்போது அவரிடம், ‛நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதனால் வலுவான கதையை எழுதி வா' என்றேன். இந்த முறை அவர் நல்ல கதையுடன் வந்தார். திரில்லர் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் நிறைய இருக்கும். இதில் உணர்வுபூர்வமான கதைகளும் உண்டு. இது பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

திறமையான இயக்குநர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ் பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளரின் இயக்கத்தில் 'வதந்தி' எனும் இந்தத் தொடரில் நடித்திருப்பதால், சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். 'உண்மை நடக்கும். பொய் பறக்கும்' என இந்த தொடரில் ஒரு வசனம் இடம் பெற்று இருக்கிறது. கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் இயல்பாக பேசும் இந்த பேச்சு, இந்த தொடருக்கு பொருத்தமானது. டேக் லைனாக இணைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.