புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து மக்களவை சபாநாயகர் முடிவு செய்வார் என்று ஒன்றிய இணை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது.
நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்டியம் தயாராகிவிடும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகின்ற டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்புற இணை அமைச்சர் கவுசல் கிஷோர் அளித்த பேட்டியில், ‘‘புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் இறுதி பணிகள் நடந்து வருகிறது.
குளிர்கால கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடத்துவதா? அல்லது பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடத்துவதா? என்பது குறித்து மக்களவை சபாநாயகர் தான் முடிவு செய்வார்’’ என்றார். இந்த நிலையில் 4ம் தேதி காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகின்றது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் கட்சி சார்பில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள், பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.