ப்ராங்க் வீடியோ.. இவ்ளோ டேஞ்சரா?; யூடியூபர்கள் அதிர்ச்சி!

சமூக ஊடகங்களில் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டார்.

இவர், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவரது ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி உடனே நிராகரித்தார்.

மேலும், எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸ் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், இணைய தள குற்றங்களை கண்காணிக்க சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். நீதிபதிகள், அரசியல் சாசன பதவி வகிப்பவர்கள் மீது ஆதாரமற்ற கருத்துகளை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யூடியூப் என்கிற போர்வையில், மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்த நீதிபதிகள், ‘சமூக ஒழுக்கம், நல்லிணக்கத்தை பராமரிக்க நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டிய நேரம் இது’ என சற்று காட்டமாகவே கருத்து தெரிவித்து இருந்தனர்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தபோதிலும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனி நபர்கள் சிலர் பொதுமக்களிடம் குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து ப்ராங்க் வீடியோஸ் என்ற பெயரில் தங்களது யூடியூப் சேனலில் வெளியிடுவது அதிகரித்தபடியே தான் உள்ளது.

ப்ராங்க் வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில் முறையாக செய்து யூடியூப் சேனலில் வெளியிட்டு வருவாய் ஈட்டுகின்றனர். இவ்வாறு ப்ராங்க் வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே மிகுந்த தாக்கத்தையும், திடீர் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம் சுழிக்கும் வகையிலும் வரம்பு மீறிய செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியும், மனரீதியான பாதிப்பும் ஏற்படுகிறது.

இவ்வாறு ப்ராங்க் வீடியோ எடுப்பவர்கள் அதால் பாதிக்கப்படுபவர்களை சமாதானம் செய்கின்றனர். மேலும் சில சமயங்களில் ப்ராங்க் வீடியோக்கள் எடுப்பவர்களின் செயல்கள் பொதுமக்களிடம் விரும்பத்தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

இவ்வாறு எடுக்கப்பட்ட வீடியோக்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதி இல்லாமலும் அவருக்கு தெரியாமலும் யூடியூப் சேனல்களில் வெளியிடப்படுவதால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரம், இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இந்நிலையில் தான் சென்னையை சேர்ந்த ரோகித் குமார் என்ற இளைஞர் பிராங்க் வீடியோக்கள் வெளியிடும் 5 யூடியூப் சேனல்கள் மீது மத்திய குற்ற பிரிவில் புகார் அளித்து இருந்தார்.

இந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்கி எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே சமயம் இனி வருகிற காலங்களில் பிராங்க் வீடியோவால் பொதுமக்கள் பாதிக்காத விதமாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும், புகாரளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது வீடியோவின் தன்மைக்கு ஏற்ப கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.