“முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறி… அமைச்சர்கள் சண்டைதான் அதற்கு உதாரணம்!" – டிடிவி.தினகரன்

“தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால், அமைச்சர்களிடையே வெளிப்படையாக சண்டை ஏற்படுகிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு இதுதான் உதாரணம். அ.தி.மு.க என்ற கட்சியே செயல்படாமல் உள்ள நிலைமைக்கு எடப்பாடிதான் காரணம்” என  டி.டி.வி.தினகரன் விமர்சித்துள்ளார்.

டி.டி.வி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நட்சத்திரரீதியாக தனது 59-வது வயது நிறைவடைந்து 60-வது வயது துவங்குவதை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனுறையும் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயிலில்  உக்கிர ரத சாந்தி ஹோமங்கள் செய்து வழிபாடு செய்தார். தொடர்ந்து  தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை  தினகரன் குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “அ.தி.மு.க. கட்சி செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல், கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க பற்றி பேசுவது தேவையற்றது. தேர்தல் சமயத்தில் பேசிக் கொள்ளலாம், சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது அதுபற்றி எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும், மத்தியில் பிரதம வேட்பாளர் யார் என்று சொல்லுகின்றபோது கூட்டணி அமைக்கப்படும். தி.மு.க ஒன்றரை ஆண்டுக்கால ஆட்சியில் மக்களிடம் வருத்தத்தை சம்பாதித்துள்ளது. அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால்  இன்னும் மோசமான நிலையை சந்திப்பார்கள், வருகின்ற தேர்தலில் தி.மு.க-வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும். மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க விடியல் ஆட்சியின் அவலங்கள். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தி.மு.க அரசு உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் 11 மருத்துவக்கல்லூரிகள் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான் தி.மு.க-வுக்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் தீர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் குறைந்தது ரூ.3,000 வழங்க வேண்டும். மக்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆளுமை கேள்விக்குறியாக உள்ளதால்தான் அமைச்சர்கள் இடையே சண்டை ஏற்படுகிறது. இதுவும் திராவிட மாடல் ஆட்சிக்கு ஒரு உதாரணம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.