போதைப் பொருள் பாவனை மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவருவதை முற்றாக இல்லாதொழிக்கும் நோக்கில்
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் மகா வித்தியாலயத்திலும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஐயன்குளம் மகா வித்தியாலயத்திலும் இன்று (23) விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வட மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை சடுதியான அதிகரித்துவருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கிணங்க முல்லைத்தீவு மாவட்ட செயலக சிறுவர் பிரிவினரின் ஏற்பாட்டில் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் தொடர்ச்சியாக விசேட விழிப்புணர்வு செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
செயலமர்வில் வளவாளராக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.குணபாலன் கலந்து கொண்டார். செயலமர்வில் தரம் 09 தொடக்கம் உயர்தர மாணவர்கள் வரையான சுமார் 260 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போதைப் பொருள் பாவனை, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், உலகளாவிய ரீதியில் அடிமையானவர்களின் சான்றாதாரங்கள், மாணவர்களின் சிந்தனை, நடத்தைகள், போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள், சட்ட ரீதியான விடயங்கள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.