கடந்த சில நாள்களாக சலசலத்துவந்த ‘வாரிசு’ பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. ஆந்திராவில் ‘வாரிசு’ வெளியாவதில் எந்தச் சிக்கலும் நேராது என்றும், அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பொங்கல் விருந்தாக ‘வாரிசு’, ‘துணிவு’ வெளியாகின்றன. விஜய்யின் ‘வாரிசு’ தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயரில் வெளியாகிறது. ஆந்திராவில் சங்கராந்திப் பண்டிகை வருவதால் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும், கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், தெலுங்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதாக வந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’, பாலகிருஷ்ணாவின் ‘வீர நரசிம்ம ரெட்டி’, அகில் அக்கினேனியின் ‘ஏஜென்ட்’ ஆகிய படங்களுடன் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘வாரிசு’ படமும் வெளியாகிறது.

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் தெலுங்கு மொழிமாற்றப் படமும் இதே நாளில் அங்கு வெளியாகிறது. இந்நிலையில் நேரடித் தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதுடன், அதற்கு அதிக தியேட்டர்களும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் லிங்குசாமி உட்பட பலரும் ‘வாரிசு’க்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.
இந்நிலையில் சென்னையில் இன்று தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் ‘வாரிசு’ ரிலீஸ் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவரான தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமியிடம் பேசினேன்.
“இன்னிக்கு நடந்தது வழக்கமான சங்கக் கூட்டம்தான். விஜய் சார் படம்னால `வாரிசு’க்கான பேச்சாகிடுச்சு. பண்டிகை நாள்களில் தமிழ்ப் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கோம். இங்கே இரண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் இருப்பது போல, தெலுங்கிலும் இரண்டு சங்கங்கள் இருக்கு. அதில் ஒரு சங்கம்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது.

அந்தந்த மாநிலங்களில் அந்த மொழிகளுக்கு தியேட்டர்கள் கிடைக்கும்தான். பிறகுதான் டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். நம்ம ஊரிலும் அதான் நடைமுறையில் இருக்கு. அதனால இதைப் பெரிதாக்க வேண்டாம். இருந்தாலும் தமிழ்ப் படங்கள் அங்கே வெளியாவதிலும் அதிக தியேட்டர்கள் ஒதுக்குவதிலும் எந்தப் பிரச்னையும் இருக்காது எனச் சொல்லியிருக்கிறார்கள். அப்படி நேர்ந்தால் நாமும் அதுபோல தீர்மானம் நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்று இங்கு கலந்து பேசியிருக்கிறோம்” என்கிறார் முரளி.