ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் முடக்கம்: அதிகாரிகள் அலட்சியத்தால் குளறுபடி

புதுச்சேரி: புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் அதிகாரிகளின் ஆர்வமில்லாத காரணத்தால் மந்தமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி நகரை அழகுப்படுத்தும் பொருட்டு, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கடந்த 2017ம் ஆண்டு துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசுகள் தலா 50 சதவீதம் நிதி வழங்கும்.
இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலா மேம்பாடு, புராதான கட்டங்கள் சீரமைப்பு, பஸ் நிலையம் மற்றும் குபேர் மார்க்கெட் நவீன மயமாக்குவது, அண்ணா விளையாட்டரங்கம், கடலுார் சாலையில் ரயில்வே சுரங்கபாதை, மரப்பாலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம், மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்துவது, பாதாள சாக்கடை சீரமைப்பு, மின் விளக்குளை நவீனமாயமாக்கல், மின் மாற்றிகளை நவீனப்படுத்துதல்.

பெரியவாய்க்காலை சீரமைத்து அழகு படுத்துதல். நகர நிர்வாகத்தை கணினி மயமாக்கல், நகர் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்களை சர்வேலென்ஸ் மூலம் ஒருங்கிணைத்தல், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட 108 பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடியும், மாநில அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கிட முடிவு செய்து பணிகள் துவங்கப்பட்டது. இதில் தற்போது மத்திய அரசின் நிதியாக ரூ.196 கோடியும், மாநில அரசின் பங்கீட்டு நிதியாக ரூ.60 கோடி என மொத்தம் ரூ.256 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

75 சதவீத பணிகள் நிலுவை

இந்த பணியில் பொதுப் பணித்துறை, மின் துறையினர் அவர்கள் தொடர்புடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2017ல் துவங்கிய இத்திட்ட பணிகள் வரும் 2023ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை 25 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. 75 சதவீத பணிகள் முடிக்க வேண்டியுள்ளது.

latest tamil news

ஊழியர்கள் பற்றாக்குறை

பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம், இத்திட்டத்தை செயல்படுத்த போதிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒரு திட்ட பொது மேலாளர், 2 செயற்பொறியாளரகள், 2 இளநிலை பொறியாளர்கள் ஆகியோர் மட்டுமே நிரந்தர பணியாளர்கள் உள்ளனர்.

பணிகளை கண்காணித் திட 10 ஓய்வு பெற்ற பொறியாளர்களும், கீழ்நிலை ஊழியர்கள் 32 பேர் தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். போதிய அதிகாரிகள் இல்லாததால், திட்ட பணிகளை கண்காணித்திட முடியாமல், மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

மேலும், ஒப்பந்தாரர்கள் தேர்வு செய்ததிலும் மெகா குளறுபடிகள் நடந்துள்ளது. போதிய கட்டமைப்பு வசதி இல்லாததால், பணிகளை விரைவாக செய்ய முடியாமல் ஒப்பந்ததாரர்கள் காலம் கடத்தி வருகின்றனர்.

இதனால், புதிய ஒப்பந்தகார்களை நியமித்தல் மற்றும் மாநில அரசின் பங்கு தொகை வழங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

நிதி பெறுவதில் சிக்கல்

மத்திய அரசு வழங்கிய நிதியும், அதே அளவிற்கு மாநில அரசு நிதியும் செலவிட்ட பிறகே, மத்திய அரசு அடுத்தகட்ட நிதியை வழங்கும். இதுபோன்ற சிக்கலால், மத்திய அரசிடம் நிதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகாரி விளக்கம்

இது குறித்து ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளிடம் கேட்டபோது, பணிகள் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி அளவிற்கு பணிகள், குறிப்பாக புதிய பஸ்நிலைய பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.
ரயில்வே சுரங்கப்பதை, மேம்பாலம் கட்டுதல், தற்போதுள்ள புதிய பஸ் நிலையத்தை நவீனமயமாக்கால் உள்ளிட்ட பணிகள் தேசிய கட்டுமான கழகத்தில் ஒப்படைக்கப்பட்டு பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் துவங்க உள்ளது என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.