Amazon Layoff: அமேசான் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக ஊழியர் அமைப்புகள் தொழிலாளர் அமைச்சகத்தை அணுகியுள்ளன. ஆன் லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா (அமேசான் இந்தியா) ஊழியர்களின் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், அதற்கு எதிராக நிறுவனத்துக்கு தொழிலாளர் அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஊழியர் சங்கத்தின் புகாரின் பேரில் அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசில், நிறுவனம் தனது நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வது பற்றி அமேசான் செய்தி வெளியிட்டிருந்தது. இதில் பொறியாளர் முதல் விஞ்ஞானி வரை பல நிலையிலான ஊழியர்கள் அடங்குவர்.
அமேசானில் இருந்து ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு மெயிலில், வரும் நவம்பர் 30ம் தேதிக்குள் பணி நீக்க செயல்முறையை முடிக்க காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தொழிலாளர் அமைச்சகம் அனுப்பிய அறிவிப்பில், அமேசான் அதிகாரி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, பணி நீக்க நடவடிக்கை தொடர்பான அனைத்து சான்றுகள் மற்றும் ஆவணங்களுடன் தொழிலாளர் துறை அலுவலகத்தில் குறிப்பிட்ட நேரம் மற்றும் நாளில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ஊழியர்களின் அமைப்பான யூனியன் நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட் (NITES), தொழிலாளர் அமைச்சகத்திற்கு புகார் அனுப்பியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை ஏற்பட்டுள்ளது.
புகாரில், நிறுவனம் ஆட்குறைப்பு விதிகளை பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களை பதவியை விட்டி விலகுமாறு வற்புறுத்துவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு அனுப்பிய புகாரில் NITES கூறியிருந்தது.
பணியாளர்கள் அமைப்பு அளித்த புகாரில், ஆட்குறைப்பு விதிகளை நிறுவனம் பின்பற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளது. நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சலில், பல பதவிகளில் பணியாளர்கள் இனி தேவையில்லை என்றும், அதனால் சில பணியிடங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதில் சில ஊழியர்களின் பதவிக்காலம் ஜனவரி 17, 2023 வரை உள்ளதாகவும், அதன் பிறகு சேவை நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தொழில் விவகார சட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் முன் அனுமதியின்றி எந்த முதலாளியும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாது. ஒரு ஊழியர் ஒரு வருட பணிக்காலத்தை நிறைவு செய்திருந்தால், மூன்று மாதங்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்காமல் அவரை நிறுவனத்தில் இருந்து நீக்க முடியாது என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.