15 ஆண்டுகளில் 31 பெண்கள் பாலியல் வன்கொடுமை மரணத்திற்கு பின் கண்டறியப்பட்ட குற்றவாளி

சிட்னி

ஆஸ்திரேலியாவில், 15 ஆண்டுகளில் 31 பெண்களைக் குறிவைத்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை, 40 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் 1985 – 2001 வரையிலான 15 ஆண்டுகளில் நடந்திருக்கிறது. ஆரம்பகால விசாரணையில், முதலில் பல்வேறு நபர்கள் இதில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்பட்டது. பின்னர் ஒருவழியாக டி.என்.ஏ சோதனை மூலம், இதைச் செய்தவர் கீத் சிம்ஸ் என்பது தெரியவந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இந்தக் குற்றங்கள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டாலும் கூட 2001-ம் ஆண்டு, 12 பாதிக்கப்பட்ட நபர்களின் டி.என்.ஏ சோதனை முடிவுகள் ஒரே மாதிரியானது என்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மற்ற 19 சம்பவங்களையும் போலீசார் இதனுடன் இணைத்தனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்கள் 14 – 55 வயதுடையவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அந்த நபரைப்பற்றி, 160 – 180 செ.மீ உயரம் கொண்டவர், கருமையான நிறமுடையவர், பழுப்பு நிற கண்கள், அகன்ற மூக்கு கொண்டவர் என்று ஒத்த விளக்கங்களைக் கூறியிருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், போலீஸ் தரவுத்தளத்தில் இது தொடர்பான டி.என்.ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்தனர். இது சந்தேகத்துக்குரிய எண்ணிக்கையை 324 பேராகக் குறைத்தது.

அதையடுத்து ஒருவழியாகக் கடந்த செப்டம்பரில், சிம்ஸிடமிருந்து ஏற்கெனவே இருந்து எடுக்கப்பட்டிருந்த டி.என்.ஏ மாதிரி, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எடுக்கப்பட்டவற்றுடன் சரியான பொருத்தமாக இருப்பது கண்டறியப்பட்டது.

கீத் சிம்ஸ் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டாலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் சிம்ஸ், மிகவும் விரும்பத்தகுந்த தந்தை, தாத்தா மற்றும் சமூக உறுப்பினர் என குடும்ப மற்றும் நண்பர்கள் வட்டாரம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.