2வது நாளாக 50 இடங்களில் ரெய்டு தெலங்கானா அமைச்சர் மகனுக்கு மாரடைப்பு: வருமான வரித்துறை தாக்கியதாக குற்றச்சாட்டு

திருமலை: தெலங்கானாவில் அமைச்சர் மல்லாரெட்டி வீடு உள்பட 50 இடங்களில் நேற்று 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவரின் மகனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்  மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வருமானவரி அதிகாரிகள் தனது மகனை தாக்கியதாக மல்லரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி செய்து வருகிறது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருக்கும் மல்லாரெட்டியின் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், அவருக்கு சொந்தமான மருத்துவ பல்கலைக் கழகம், இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என 14 கல்லூரிகள், இவரின் உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்கள் என 50 இடங்களில் சோதனை நடந்தது.

இதில், கணக்கில் காட்டப்படாத ரூ.4.5 கோடி ரொக்கம், தங்க நகைகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நேற்று காலையும் 2வது நாளாக மல்லாரெட்டியின் வீடு உட்பட 50 இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடந்தது. அதில், அமைச்சரின் மகன் மகேந்திர ரெட்டி வீட்டில் இருந்து 2 டிஜிட்டல் லாக்கர்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதை திறக்கும்  முயற்சிகள் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மகேந்திர ரெட்டிக்கு நேற்று காலை மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை மல்லாரெட்டியின் சொந்த மருத்துவமனையான நாராயணா இருதாலயா மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்த்தனர்.

தனது மகனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல், மல்லாரெட்டிக்கு தாமதமாகதான் தெரிய வந்தது. இதனால் ஆவேசமான அவர், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கூறுகையில், ‘வருமான வரித்துறை அதிகாரிகள் எனது மகனை இரவு முழுவதும் தாக்கி சித்ரவதை செய்துள்ளதாக சந்தேகிக்கிறேன். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனே அவரை பார்க்க செல்கிறேன்,’ என தெரிவித்தார்.

பாஜ.வின் பழிவாங்கும் செயல்
மகனை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மல்லா ரெட்டி கூறுகையில், ‘நான் எனது கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்றுக்கொடுத்து மருத்துவர்கள், இன்ஜினியர்கள் போன்றவர்களை உருவாக்கி வருகிறேன். நான் முறைகேடு செய்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. நான் அமைச்சராக இருப்பதால், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் இதுபோன்று வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்படுகிறது. இது அரசியல் ரீதியான பழிவாங்கும் செயல்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.