செசபீக்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ளது செசபீக் நகரம். இங்குள்ள சாம்ஸ் சர்க்கிள் என்ற பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் அங்காடி உள்ளது.
இங்கு கடந்த செவ்வாய்க் கிழமை இரவு 10 மணிக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர். வரும் சனிக்கிழமை அமெரிக்காவில் ‘தேங்க்ஸ்கிவிங்’ என்றழைக்கப் படும் நன்றியளித்தல் விடுமுறை கொண்டாடப்படுகிறது. அதற்கான பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
அப்போது திடீரென ஒருவர், வாடிக்கையாளர்கள் மீது சர மாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திஉள்ளார். இதில் பலர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த செசபீக் நகர போலீஸார், வால்மார்ட் அங்காடியை சுற்றிவளைத்தனர்.
இதுகுறித்து செசபீக் போலீஸ்அதிகாரி லியோ கோசின்ஸ்கி கூறும்போது, ‘‘துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அங்காடியில் இறந்து கிடந்தார். அவர் ஒருவர்தான் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருப்பார் என்று நம்புகிறோம்’’ என்றார்.
ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் யார், அவர் எப்படி உயிரிழந்தார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. வழக்கமாக வால்மார்ட்அங்காடி இரவு 11 மணிக்கு மூடப்படும். அதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும், 10 பேர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விர்ஜினியா மாகாணத்தின் செசபீக் மாவட்ட செனட்டர் லூயிஸ்லூகாஸ் கூறும்போது, ‘‘என்னுடைய மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மனம்நொறுங்கிவிட்டேன். அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓய மாட்டேன்.
கடந்த சனிக்கிழமை கொலராடோவில், தன்பாலின சேர்க்கையாளர்கள் கிளப் ஒன்றில் துப் பாக்கிச் சூடு நடந்தது. அதில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 3 நாட்களில் நடைபெற்ற 2-வது துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அமெரிக்க மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.