புதுடில்லி: முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அருண் கோயலை புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் நியமித்தது எப்படி, ஏன் இவ்வளவு அவசரம்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியத் தேர்தல் கமிஷனராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இதற்கிடையே இது தொடர்பான வழக்கை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
நேற்று நடந்த விசாரணையில் அருண் கோயல் நியமனம் தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி இன்று (நவ.24) மீண்டும் வழக்கு விசாரணை தொடர்ந்த நிலையில், அருண் கோயல் நியமனம் தொடர்பான விவரங்களை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதனையடுத்த நீதிபதி ஜோசப் அமர்வு மத்திய அரசிடம் சரமாரி கேள்வி எழுப்பியது.
”பல மாதங்களாகத் தேர்தல் கமிஷனர் பதவி காலியாக இருந்த நிலையில், அதை நிரப்பாதது ஏன்? புதிய தேர்தல் கமிஷனராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? அவ்வளவு அவசரம் ஏன்? 4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி? என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்க வேண்டும்” எனக் கேளவி எழுப்பினர்.
மேலும், ”தேர்தல் கமிஷனர் நியமன கட்டமைப்பு அக்கறை கொள்கிறோம். தேர்தல் கமிஷனர்களின் பெயர்கள் பரிந்துரைக்கு எடுத்துக் கொள்வது அதிலிருந்து ஒருவரை கமிஷனராக நியமிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எப்படி மேற்கொள்ளப்படுகிறது என்பதை வெளிப்படையாக தெரிந்து கொள்ள விரும்புகிறோம். தேர்தல் கமிஷனர்கள் நியமிக்கப்படும் முறை என்பது மிகவும் மர்மமாக இருக்கிறது” எனவும் கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement