சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சி மீதான, 10 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை ஆளுநரிடம் அவர் அளித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: உளவுத் துறை உரிய கவனம் செலுத்தியிருந்தால், கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுத்திருக்கலாம். ஆனால், உரிய முறையில் செயல்பட உளவுத் துறை தவறிவிட்டது. திமுக அரசு திறமையற்றது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆட்சிக்கு வந்த 18 மாதங்களில், திமுக அரசு சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியதால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி ஆகியவை அன்றாட செய்திகளாகிவிட்டன.
கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு உளவுத் துறையும், முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையும் செயல்படாததே காரணம். அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக , போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க முடியவில்லை.
அண்டை மாநிலத்திலிருந்து சர்வ சாதாரணமாக போதைப்பொருள் தமிழகத்துக்குள் நுழைந்து, அனைத்துப் பகுதிகளிலும் தடையின்றிக் கிடைக்கிறது.
திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. திராவிட மாடல் என்றால் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்றாகிவிட்டது.
இதுபோன்ற சம்பவங்களையும், அரசியல் நிகழ்வுகளையும் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.
தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதை அமைச்சரே ஒப்புக்கொண்டு விட்டார். மக்களின் வரிப் பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. மருந்து கொள்முதலில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. நாட்டிலேயே சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கக்கூடிய மாநிலம் தமிழகம். ஆனால், ஊழலும், முறைகேடும் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டில் இருக்கும் பணிகளை விளம்பரம் செய்கிறார்கள். விளம்பர பேனர் விலை ரூ.350. ஆனால், பேனருக்கு ரூ.7,906 பில் போட்டிருக்கிறார்கள். மேலும், இந்தப் பணியை ஒரே நிறுவனத்துக்கே கொடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் மெகா ஊழல் நடந்திருக்கிறது. அதேபோல டெண்டர் விடுவதிலும் முறைகேடுகள் நடக்கின்றன.
கரூரில் டெண்டர் ஊழல் தொடர்பாக, சில அதிகாரிகளை மட்டும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மட்டும் காரணமாக இருக்க மாட்டார்கள். அதிகாரம் மிக்கவரின் உத்தரவின் பேரில்தான் ஊழல் நடைபெறும்.
டாஸ்மாக் நிர்வாகத்திலும் ஊழல் அதிகம் உள்ளது. மதுபான ஆலையிலிருந்து கலால் வரி செலுத்தாமல் முறைகேடாக கொண்டுவரப்படும் மது வகைகளை பார்களில் விற்று, கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதுபோல பல்வேறு துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. அவற்றை எல்லாம் விசாரிக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.
தவறுகளை சுட்டிக்காட்டுவதால், ஆளுநர் மோசம் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், ஆளுநரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அதனால்தான், ஊழல் அரசு ஆளுநருக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.