இனி வாரந்தோறும் புதன்கிழமை… சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு!

பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்பது தான் பல பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கில் கொட்டி கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறோம். அரசு பள்ளிகளில் அப்படியான கற்பித்தல், ஆங்கிலப் பயிற்சி, ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்காது என்ற மனநிலை இன்னும் நிலவி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காலை இறைவணக்கக் கூட்டத்தில் சில நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசி பழக வேண்டும் என்றும், அதற்காக சில தலைப்புகளை வழங்கி தயாராகி வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வெற்றிகரமாக நடைமுறைப்படும் பட்சத்தில் அரசு பள்ளிகள் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாராகி விடும் என்கின்றனர்.

தற்போதே தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்படும் அரசுப் பள்ளிகள் குறித்த செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவருவதை பார்க்க முடிகிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் தான் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் எடுக்கப்படவுள்ளன.

இதுபற்றி பேசிய சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தற்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு ’ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகள் ஆசிரியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இது ஆங்கிலத்தில் சரளமாக பேசும் திறனை கொண்டு வரும். அதுமட்டுமின்றி மாநில வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்ட தலைப்புகளில் கலந்துரையாடல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆங்கிலத்தின் மீதான அச்சம் படிப்படியாக நீங்கும். வாரந்தோறும் புதன்கிழமை அன்று காலை இறைவணக்கக் கூட்டத்தில் 2 நிமிடங்கள் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும். இதற்காக மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் இருந்து சில தகவல்களை எடுத்து தயார்படுத்திக் கொள்ளலாம்.

தற்போது மாணவர்கள், ஆசிரியர்களின் தினசரி வருகை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் எந்த ஆசிரியர் பணிக்கு வரவில்லை. அதற்கான காரணம் என்ன? மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யலாம்? என திட்டமிட முடியும். வகுப்பறை தேர்வுகளையும் நன்றாக கவனித்து பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்று கூறினார்.

இவ்வாறு தொடக்கப் பள்ளிக் கூடங்களில் இருந்தே பயிற்சிகள் கொடுத்தால் மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் நிகழும். மேடையில் ஏறி பேசுவதில் இருக்கும் அச்சம் நீங்கும். 6ஆம் வகுப்பு வரும் போது ஆங்கிலத்தின் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டிருக்கும். ஓரளவு நன்கு பேசக்கூடியவர்களாகவும் இருப்பர். இது வருங்காலத்தில் சிறப்பான கற்றல் வாய்ப்புகளை உண்டாக்கி தரும் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.