எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி நான்… சந்திரபாபு தான் முதுகில் குத்தியவர்- போட்டு தாக்கிய ஜெகன்!

எம்.ஜி.ஆர் என்றால் சொன்னால் அள்ளி அள்ளி கொடுக்கும் வள்ளல். தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களின் ஒருவர். முன்னாள் முதல்வர். அதிமுகவின் நிறுவனர் என்றெல்லாம் தமிழர்களின் மனங்களில் தோன்றும். எம்.ஜி.ஆர் கட்டி காத்த அதிமுக எப்படியெல்லாம் பூசலில் தவித்து வருகிறது என்பது ஊரறிந்த விஷயம். எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளை தூக்கி எறிந்து விட்டு, அவரது நிலைப்பாட்டிற்கு எதிரான விஷயங்களை கட்சி ஆளுமைகள் கையிலெடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த சூழலில் ஆந்திர மாநிலத்தில் எம்.ஜி.ஆரின் பெயர் ஒலித்திருக்கிறது. அதுவும் மிகவும் பெருமைக்குரிய வகையில். அப்படி யார் பேசியிருக்கிறார்கள் எனக் கேட்கிறீர்களா? அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தான். இனி விஷயத்திற்கு வருவோம். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டையில் ’பூ ஹக்கு’ (Bhu Hakku) என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் 2 ஆயிரம் கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, யாராவது ஒருவர் சுயமாக கட்சி தொடங்கி கடின உழைப்பால் பொதுமக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தால் அவரை எம்.ஜி.ஆர் அல்லது என்.டி.ஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்வார்கள்.

அதுவே கட்சியையும், முதல்வர் நாற்காலியையும் மாமனாரிடம் இருந்து பறித்துக் கொண்டால் அவரை சந்திரபாபு என்று தான் கூறுவார்கள். தனது மனைவிக்காக மிகப்பெரிய போரை தொடுத்தவர் ராமர். அடுத்தவர் மனைவியை கடத்தி சென்றவர் ராவணன். இதில் ராவணனின் ஆதரவாளர்களை தீயவர்கள் என்று அழைப்போம். துரியோதனனுக்கு ஆதரவாக நிற்பவர்களை துஷ்ட சதுஷ்தயம் என்று அழைக்கிறோம்.

இந்நிலையில் மாமனாரின் முதுகில் குத்தி ஆட்சியை பறித்து, மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்த ஒருவரை எப்படி அழைப்பது? அவரை ஆதரிக்கும் நபர்களை எப்படி அழைக்க வேண்டும்? அவர்களை தீய சக்திகள் என்று தானே அழைப்போம். உண்மையான மக்களாட்சியில் தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களுக்கு ஆட்சி அமைக்க மீண்டும் வாய்ப்பு கொடுப்பீர்களா?

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ராவணனிற்கு, துரியோதனனுக்கு, முதுகில் குத்திய துரோகிக்கு யாராவது வாய்ப்பு அளிப்பீர்களா? டிவி சேனல்களிலும், செய்தித்தாள்களில் வருவதை நம்பி ஏமாற்றம் அடைந்துவிடாதீர்கள். அரசு அள்ளித் தரும் நலத்திட்ட உதவிகளை நினைத்து பாருங்கள். அதன்பிறகு நல்லதொறு முடிவெடுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.

அரசியல் கட்சி தொடங்கி வெற்றி பெற்றவர்கள் என்ற பட்டியலில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். அடுத்த தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. வரும் 2024ல் மக்களவை தேர்தலும் வரவுள்ளதால் வாக்கு வங்கி அரசியலுக்கு அச்சாரம் போடத் தொடங்கிவிட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.