தாம்பரம்: தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவிகளை செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் ஈடுபட்டனர். தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் ஜி.கே.எம் நகர் பகுதியில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு, ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் நேற்று செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது.
அப்போது, தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகள் சிலரை, கட்டணம் செலுத்தாததால், கல்லூரி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. கட்டணம் செலுத்திய பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவீர்கள் எனக் கூறி வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 80 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பீர்க்கன்காரணை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அபபோது, மாணவ, மாணவிகள் விரைவில் செமஸ்டர் கட்டணம் கட்டுவதாக உறுதியளித்தனர். பின்னர், அவர்களை தேர்வு எழுத கல்லூரி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கல்லூரி உள்ளே சென்று தேர்வு எழுதினர்.