மானாமதுரை: இடைக்காட்டூரில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு மெழுகு விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கார்த்திகை மாதம் முருகன் பிறந்த நாளான திருக்கார்த்திகையை முன்னிட்டு வீடுகளில் அகல்விளக்குள் ஏற்றுவது வழக்கம். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் நூற்றாண்டுகளாக மண்விளக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் மெழுகு விளக்குகள் தயார் செய்யப்படுகிறது. இந்த விளக்குகள் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.
மனதை கவரும் வகையில் பலவண்ணங்களில் இந்த மெழுகுவிளக்குகள் தயார் செய்யப்படுவதால் பெண்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இது குறித்து மெழுகு விளக்குகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் சிவக்குமார் கூறுகையில், ‘‘இருபது வருடங்களுக்கு மேல் மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழில் செய்து வருகிறேன். ஏழு வண்ணங்களில் தயாரிக்கப்படும் இந்த விளக்குகள் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு குறையாமல் பிரகாசமாக எரியக்கூடியது. பெண்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பத்து எண்ணிக்கை உள்ள ஒரு பாக்ஸ் ரூ.30 முதல் அறுபது வரை விற்கிறோம்’’ என்றார்.