குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2ம் நாளாக போராட்டம்: அலுவலகங்கள் மூடல்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறு விடுப்பு எடுத்து இன்று இரண்டாம் நாளாக போராட்டம் நடத்தியதால் அலுவலகங்கள் மூடப்பட்டன. வளர்ச்சி துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங்கடந்த ஆய்வுகள், விடுமுறை தின, இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் ஆப் காணொலி ஆய்வுகள் அனைத்தையும் கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்புநிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஆகியன வழங்க வேண்டும்.

வளர்ச்சி துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த காலங்களில் மேற்கொண்ட வேலைநிறுத்த போராட்ட காலங்களை வரன்முறைப்படுத்த வேண்டும். வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்கள் உட்பட அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாம் நாளாக இன்றும் ஒட்டுமொத்த சிறு விடுப்பு போராட்டம் நடக்கிறது.

குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு அலுவலகம், தோவாளை, அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், குருந்தன்கோடு, திருவட்டார், முன்சிறை, மேல்புறம், கிள்ளியூர், தக்கலை ஆகிய 9 வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் போதிய பணியாளர்களின்றி அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் இருந்தது. மேலும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் உட்பட ஒரு சில அலுவலங்கள் மூடப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் வளர்ச்சி பிரிவுகளில் 437 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றன நிலையில் இதில் நேற்று 2ம் நாளாக 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.