கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரிப்பு: ஆய்வு பணிக்கு ஒன்றிய குழு விரைவு

டெல்லி: கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் குழந்தைகள் இடையே தட்டம்மை பாதிப்பு அதிகரித்துள்ள சூழலில் ஆய்வு பணிக்கு மத்திய குழு விரைந்து உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் 2 ஆண்டுகளாக பரவி பெருந்தொற்றாக உருவெடுத்து உள்ள சூழலில், சமீப நாட்களாக நாடு முழுவதும் தொற்று குறைந்து வருகிறது. இந்த நிலையில், நாட்டின் சில பகுதிகளில் தட்டமை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, மராட்டியத்தின் மும்பை, கேரளாவின் மலப்புரம், குஜராத்தின் ஆமதாபாத் மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சி ஆகிய நகரங்களில் தட்டம்மை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இவர்களில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த நிலையில், தொற்று அதிகரித்து உள்ள கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் மத்திய அரசு சார்பில் உயர்மட்ட குழுக்களை ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதில், ஜார்க்கண்டின் ராஞ்சி நகருக்கான மத்திய குழுவில், டெல்லியின் தேசிய நோய் கட்டுப்பாடு மையம் மற்றும் டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் நிபுணர்கள் இடம் பெற்று உள்ளனர். இதேபோன்று குஜராத்தின் ஆமதாபாத்திற்கு, மும்பையின் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மண்டல சுகாதார மற்றும் குடும்பநல அலுவலக நிபுணர்கள் அடங்கிய மத்திய குழு செல்லும்.

கேரளாவின் மலப்புரத்திற்கு, திருவனந்தபுரத்தில் உள்ள மண்டல சுகாதார மற்றும் குடும்பநல அலுவலகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஜவகர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), மற்றும் டெல்லி லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரி ஆகியவற்றின் நிபுணர்கள் அடங்கிய மத்திய குழுவை அரசு அனுப்பியுள்ளது. இந்த குழுக்களுடன், கேரளா, குஜராத் மற்றும் ஜார்க்கண்ட் சுகாதார மற்றும் குடும்பநல மண்டல அலுவலகத்தின் முதுநிலை மண்டல இயக்குனர்கள் முறையே, அந்தந்த குழுக்களுடன் ஒருங்கிணைந்து, தொடர்பு கொண்டு, ஆய்வு பணி பற்றிய விவரங்களை கேட்டறிவார்கள்.

இந்த மத்திய குழுக்கள் சம்பவ பகுதிக்கு நேரிடையாக சென்று பார்வையிடும். நோய் பரவல் பற்றி ஆய்வு பணி மேற்கொள்ளும். மாநில சுகாதார துறைகளுடன் இணைந்து பணியாற்றி, பொது சுகாதார விசயங்கள், மேலாண் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றுக்கு வேண்டிய உதவிகளையும் செய்யும். அந்தந்த பகுதிகளில் நோய் பரவல், தொற்று ஆகியவற்றை கண்டறியும் மாநில குழுக்களுடன் இணைந்து இந்த மத்திய குழுக்கள் பணியாற்றி நோய் பாதிப்புகள் பற்றிய விவரங்கள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.